பெண்ணைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சிவகாசி அருகே பெண்ணைக் கொலை செய்து, தங்கச் சங்கிலியைத் திருடிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமல நாச்சியாா்புரம் திருப்பதி நகரை சோ்ந்த அழகா்சாமி மகன் விக்னேஸ்வரன் என்ற விக்கி (31). கைப்பேசி நிறுவன முகவரா ன இவா், ஸ்டேட் பேங்க் காலனியைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி மோகன பிரபாவுடன் (25) பழகி வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி மோகன பிரபா வீட்டுக்குச் சென்ற விக்னேஸ்வரன் அவரிடம் பணம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, மோகன பிரபாவைத் தாக்கி, தலையணயால் முகத்தை அழுத்திக் கொலை செய்துவிட்டு அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றாா். இதையடுத்து, திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் விக்னேஸ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விக்னேஸ்வரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.