திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை வி...
சீன தலைநகரில் தொடரும் கனமழை, வெள்ளம்! 34 பேர் பலி.. 80,000 பேர் வெளியேற்றம்!
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு, சுமார் 34 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே, பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், கிழக்கு ஆசிய நாடான சீனாவின் பல்வேறு மாகாணங்களிலும், கடந்த சில நாள்களாக, மழைப்பொழிவின் அளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த கனமழையால், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு, தற்போது வரை சுமார் 34 பேர் பலியானதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பெய்ஜிங் மாகாணத்தின், மியூன் மாவட்டத்தில், நேற்று (ஜூலை 28) இரவு முதல் கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாவட்டத்தில் மட்டும் 28 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மியூன் மாவட்டத்தில் வசித்து வந்த 17,000 பேர் உள்பட பெய்ஜிங் மாகாணத்தில், சுமார் 80,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், அந்நாட்டின் ஹெபெய் மாகாணத்தில், நேற்று (ஜூலை 28) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியானதுடன், 8 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெய்ஜிங்கில் சுமார் 300 மி.மீ. அளவிலான மிக அதிக கனமழை இன்று (ஜூலை 29) பெய்யக்கூடும் என சீன வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை! தன்னைத்தானே சுட்டு கொலையாளி தற்கொலை!