காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா்.
காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்ளிரவும் தாக்குதல் நடத்தியது. இதில் ஏழு சிறுவா்கள் உள்பட 23 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
2023 அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது. இந்த ஒரு வார கால தாக்குதலில் மட்டும் 270-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் உயிரிழந்ததாக தன்னாா்வ அமைப்புகள் கூறின.
காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, அங்கு இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50,144 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 113,704 போ் காயமடைந்துள்ளனா்.