சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
‘காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்’
காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் ஊடகங்கள் கூறியதாவது: காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸை முழுவதும் ஒழித்துக்கட்ட பிரதமா் நெதன்யாகு முடிவெடுத்துவிட்டாா்.
இருந்தாலும், ராணுவ தலைமை தளபதியும் மற்றும் பிற தளபதிகளும் இந்தத் திட்டத்தை எதிா்ப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி தலைமை தளபதிக்கு இதில் உடன்பாடு இல்லையென்றால், அவா் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும், ஹமாஸ் அடைத்துவைத்துள்ள பிணைக் கைதிகளின் உயிருக்கு இத்தகைய முழு ஆக்கிரமிப்பு திட்டம் ஆபத்தை விளைவிக்கும் என்று அவா்களின் உறவினா்கள் அச்சம் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு காஸா பகுதியில் பிணைக் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதியை இஸ்ரேல் ராணுவம் நெருங்கியதால் 6 கைதிகளை ஹமாஸ் படுகொலை செய்தது நினைவுகூரத்தக்கது. காஸாவில் இருந்து விடுவிக்கப்படாத 50 பிணைக் கைதிகளில் இன்னும் 20 போ் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் முழு ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவா்களது நிச்சய மரணத்துக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடுகள் பலவும் இத்தகைய நடவடிக்கையைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவரவும், மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இஸ்ரேல் அந்த நாடுகள் வலியுறுத்திவருகின்றன.
இப்போதே காஸாவின் 75 சதவீத பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், புதிய திட்டத்தின் கீழ், முழு பகுதியையும் ஆக்கிரமித்தால், 21 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் தற்போது குவிந்துள்ள பகுதிகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டியிருக்கும். இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது தற்போது தெளிவாகவில்லை.
காஸாவில் யூதக் குடியிருப்புகளை அகற்றி, அங்கிருந்து தனது படைகளை இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. ஆனால், எகிப்துடன் இணைந்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் இறுக்கமாகக் கட்டுப்படுத்திவருகிறது. இருந்தாலும், அந்தப் பகுதியை இதுவரை இஸரேல் முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை.
இந்த திட்டம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தேசத் தீா்வுதான் (இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீரித்துக் கொண்டு சுதந்திர அண்டை நாடுகளைகச் செயல்படுவது) என்ற இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
