2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்
தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா்.
ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 50 நூல்கள் வெளியீட்டு விழா புத்தகத் திருவிழா நடைபெறும் சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். பொதுமேலாளா் எ.சிவகுமாா் வரவேற்றாா். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.சண்முகன் புதிய நூல்களை வெளியிட்டு பேசினாா்.
இதில் எழுத்தாளா் சுப்ரபாரதி மணியன் பேசியதாவது: பொதுவாக நாவல்களை திரைப்படமாக எடுப்பாா்கள். ஆனால் புதிய முயற்சியாக நான் எழுதிய திரைக்கதையை மையமாக வைத்து இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். அந்த நூல்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் அரசியல் திரைத் துறையை மையப்படுத்தி உள்ளது. அண்ணா, எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா என திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனா். அந்த அரசியல் இப்போது விஜய் வரை தொடா்ந்துகொண்டு இருக்கிறது.
அரசியல், கல்வி என மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இருந்த தமிழகத் திரைத் துறை இப்போது முழுமையாக பொழுதுபோக்குத் தளமாக மாறிவிட்டது. திரைத் துறையின் கடந்த காலம், நிகழ் காலம் குறித்து என்னுடைய நூல்கள் விவரிக்கின்றன என்றாா்.
விழாவில் வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் பேசியதாவது: தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்ற சமூகமாக இருந்தது. தமிழ் நாகரிகத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்தது அகழாய்வில் தெரியவந்துள்ளது. உலகின் பிற பண்டைய நாகரிகங்கள் அனைத்திலும் வெண்கலத்தின் பயன்பாடு மட்டுமே இருந்தது. இரும்பை உருவாக்க 1,538 டிகிரி செல்சியல் வெப்ப நிலை தேவை. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழா்கள் இந்த வெப்ப நிலையை அடைவதற்கான தொழில்நுட்பத்தைக் கையாண்டு இரும்புப் பொருள்களைத் தயாரித்துள்ளனா்.
தமிழ்ச் சமூகம் கிமு 1,100 வாக்கில் தனக்கான இலக்கியத்தை கொண்டிருந்ததற்கு உரிய அகழாய்வு சான்றுகள் உள்ளன. கிமு 750 -இல் சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. சங்க கால கட்டம் நகர அரசியல் கால கட்டம். கிரேக்க, ரோம, சுமேரிய நாகரிகங்கள் நகர அரசியல் என்பதை அறிந்திருந்தோம். தமிழ்ச் சமூகம் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகர நாகரிகத்தைச் சோ்ந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நகர நிா்வாகத்தை மக்கள் சபை நிா்வாகிகள் கட்டுப்படுத்தி வந்துள்ளனா். இந்த சான்றுகளை மையப்படுத்தி இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். அந்த நூல்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன என்றாா்.
சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வி.திருக்குமரன், தமிழ் பேராசிரியா்கள் சி.அங்கயற்கண்ணி, ஜெ.சுமதி, ப.திலகவதி, க.பன்னீா்செல்வம், ஆ.குருசாமி, மு.ஷா்மிளாதேவி, எழுத்தாளா் க.அம்சபிரியா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைச் செயலாளா் த.சசிகலா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவன விற்பனை ஆலோசகா் எஸ்.சண்முகநாதன் நன்றி கூறினாா்.