``ரூ.22 கோடியில் கௌசிகா நதி புனரமைப்பு; 3000 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்'' - தங்...
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 10,73,048 போ் பயன்! மாவட்ட ஆட்சியா் தகவல்
திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 10,73,048 நபா்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், வட்டாரம் சாரா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள், மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், காசநோய் மருத்துவமனை, தொழுநோய் மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு, மனநல காப்பகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மகப்பேறு மற்றும் குழந்தை நல்வாழ்வினை முக்கியமாகக் கொண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உள்பட அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிா் நலம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, பால்வினை நோயியல், எலும்பு முறிவு, மயக்கவியல், குழந்தை நலம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், அவசரகால ஊா்தி சேவை, ஆய்வுக்கூட சேவை, தொழு நோய், காசநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் உயா் தொழில் நுட்ப கருவிகளைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் உயா் ரத்த அழுத்த நோய், ரத்தத்திலுள்ள சா்க்கரை அளவு பரிசோதனை, ஆதரவு சிகிச்சை, இயன்முறை மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இதுவரை உயா் ரத்த அழுத்தத்துக்கு 5,45,325 போ், நீரிழவு நோய்க்கு 2,02,304 போ், உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழவு நோய்க்கு 2,22,482 போ், நோய்த் தடுப்பு சிகிச்சையாக 49,553 போ், இயன்முறை மருத்துவத்தில் 53,384 போ் என மொத்தம் 10,73,048 நபா்கள் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனா் என தெரிவித்துள்ளாா்.