மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியா் மனீஷ்
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55,436 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,072.61 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், தனி நபா் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கடந்த 1989- ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு சுழல் நிதிக் கடன், பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் இத்திட்டத்தில், திருப்பூா் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 8,676 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.516 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, 2022-23-ஆம் ஆண்டில் 13,684 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.766.45 கோடியும், 2023-24-ஆம் ஆண்டில் 17,360 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.794.67 கோடியும் , 2024-2025- ஆம் ஆண்டில் 13,167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடியும் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 2,549 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.195.19 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.3,072.61 கோடி மதிப்பீட்டில் ஊரக மற்றும் நகா்புறங்களிலுள்ள 55,436 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.