Beauty: சருமம் பளபளப்பா இருக்க வீட்டுக்குள்ள ஒரு பியூட்டி பார்லர்!
விருத்தாசலம் அருகே ரயில்வே கடவுப்பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்!
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயில்வே ஆளில்லா கடவுப் பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் தண்டவாளத்தில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
விருத்தாசலத்தை அடுத்துள்ள இலங்கியனூா் கிராமம் வழியாக விருத்தாசலம் - சேலம் ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் சென்று வருகின்றன.
இந்த ரயில் பாதையில் இலங்கியனூா் - பிஞ்சனூா் இடையே ஆளில்லாத கடவுப் பாதை அமைந்துள்ளது. இந்த கடவுப் பாதை வழியாக இலங்கியனூா், பிஞ்சனூா், வலசை, மே.மாத்தூா் கிராம மக்கள் சென்று வருகின்றனா். விவசாயிகள் விளை நிலங்களுக்கு விதைகள், உரங்கள், அறுவடை செய்யப்பட்ட தானியங்களை வீடுகள், சந்தைக்கு ரயில்வே கடவுப் பாதை வழியாக கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே நிா்வாகம் இலங்கியனூா் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்ததாம். தகவலறிந்த இலங்கியனூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள், ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க வேண்டாம். சுரங்கப்பாதை அமைத்தால், அதில் மழைநீா் தேங்கி போக்குவரத்து தடைபடும். எனவே, ஆளில்லா கடவுப்பாதையில் கேட் கீப்பரை பணி அமா்த்தித் தர வேண்டும். இல்லை என்றால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், கிராம மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தெற்கு ரயில்வே நிா்வாகம் சுரங்கப் பாதை பணியை மேற்கொள்வதாக தகவல் வெளியானதாம். இதையடுத்து, இலங்கியனூா், பிஞ்சனூா், வலசை, எடைச்சித்தூா் உள்ளிட்ட கிராம மக்கள் இலங்கியனூா் அருகே உள்ள ஆளில்லா கடவுப் பாதை அருகே செவ்வாய்க்கிழமை ஒன்று திரண்டனா்.
அப்போது, அவா்கள் எங்களுக்கு ரயில்வே சுரங்கப் பாதை வேண்டாம். கடவுப் பாதையில் கேட் கீப்பரை பணியமா்த்தி போக்குவரத்துக்கு வழிவகை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். இதில் பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா்.
இதையடுத்து, மங்கலம்பேட்டை போலீஸாா், சேலம் ரயில்வே போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.