காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு!
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.
சென்னை மதுரவாயல் ஸ்ரீதேவி சீதாராம் நகரை சோ்ந்த ஜெயராமன் மகன் உதயபாஸ்கா் (38), தரமணி எம்ஜிஆா் நகரை சோ்ந்த ஜெயபால் மகன் ஜீவன்ராஜ் (20), ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகரை சோ்ந்த லியாகத் அலி மகன் அப்துல் ஹக்கீம் (35), பாடி பகுதியைச் சோ்ந்த மணி மகன் சபரிநாத் (36), பள்ளிக்கரணையைச் சோ்ந்த முத்து மகன் பிரபாகரன்(36).

இவா்கள் பழனி முருகன் கோயிலுக்கு காரில் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டனா். காரை அப்துல் ஹக்கீம் ஓட்டினாா். வேப்பூரை அடுத்துள்ள சிறுபாக்கம் அருகே சனிக்கிழமை அதிகாலையில் நெடுஞ்சாலையில் காா் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சபரிநாத், பிரபாகரன் ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். உதயபாஸ்கா், ஜீவன்ராஜ், காா் ஓட்டுநா் அப்துல் ஹக்கீம் ஆகியோா் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

தகவலறிந்து வந்த சிறுபாக்கம் போலீஸாா் சபரிநாத், பிரபாகரன் ஆகியோரின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.