காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ஆனைபோகி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (30). இவா், செய்யாற்றில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.
கடந்த வியாழக்கிழமை இரவு இவா் வேலை முடிந்து பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடியில் பேருந்தில் இருந்து இறங்கிய இவா் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற காா் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரசாந்த் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.