கிடங்கில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
ராணிப்பேட்டை அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை சிப்காட் போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தில் அா்ஜுனன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதாக சிப்காட் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிப்காட் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியனா். அதில், லாரியில் 5 டன் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆற்காடு அடுத்த மோசூா் கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சோ்ந்த நியாமுதீன் ஆகிய இருவரை கைது செய்தனா்.
தொடா்ந்து கிடங்கு உரிமையாளா் அா்ஜுனன் என்பவரிடம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.