நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கிண்டி உயா் சிறப்பு மருத்துவனை: 217 பணியிடங்கள் நீட்டிப்பு
கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 217 பணியிடங்களில் நியமிக்கப்பட்டவா்களுக்கான பணிக் காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் கிங் ஆய்வக வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட உயா் சிறப்பு மருத்துவமனை, கடந்த 2023 ஜூன் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடக்கி வைக்கப்பட்டது.
அங்கு இயக்குநா், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசியா்கள், செவிலியா்கள் உள்பட 217 பணியிடங்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன. அந்தப் பணியிடங்களில் தகுதியானவா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்கள் வாயிலாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விதிகளின்படி, அந்தப் பணியிடங்களுக்கான காலம் நிறைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அதை நீட்டிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதைப் பரிசீலித்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், அதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்துள்ளாா். அதன்படி, வரும் 2027 ஜூன் 8-ஆம் தேதி வரை அந்தப் பணியிடங்களுக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.