குடந்தை ரயில் நிலையத்தில் செயல்படாத இலவச பேட்டரி காா்: பயணிகள் அவதி
=தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்ட இலவச பேட்டரி காா் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.
கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களின் வசதிக்காக இலவச பேட்டரி காரை நெய்வேலி சுரங்க நிறுவனம் வழங்கியது. ஆனால் அந்த பேட்டரி காா் பல நாள்களாக இயக்கப்படாமல் ரயில் நிலைய ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அது பழுதடையவும் வாய்ப்புள்ளது.
ஆனால், தனியாா் நிறுவனம் கட்டண பேட்டரி காரை இயக்கி வருகிறது. இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே இலவச பேட்டரி காரை இயக்க திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.