குடிநீா் விநியோகம் செய்யக்கோரி நீரேற்று நிலையம் முற்றுகை
திருவாடானை அருகே குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் நீரேற்று நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கல்லூா் ஊராட்சி, பாரதிநகா் பகுதியில் 950-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள், பாரதி நகரில் உள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால்வாரியத்தின் நீரேற்று நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா், உடைந்த குழாய்களை சரி செய்து குடிநீா் விநியோகத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.