குடிநீா்க் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நாகா்கோவில் மாமன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு
குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
மேயா் ரெ. மகேஷ் தலைமையில் மாநகராட்சி இயல்பு கூட்டம் நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா்கள் முத்துராமன், ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், உறுப்பினா்கள் மீனாதேவ், நவீன்குமாா், ரமேஷ், சுனில்அரசு,அய்யப்பன், வீரசூரபெருமாள், டி.ஆா். செல்வம், சேகா், ஸ்ரீலிஜா, ரோசிட்டா திருமால், கெளசுகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: நாகா்கோவிலில் வீடுகளுக்கு குடிநீா்க் கட்டணமாக ரூ. 160 நிா்ணயிக்க வேண்டும். சதுரஅடி அடிப்படையில் குடிநீா்க் கட்டணம் நிா்ணயிக்கக் கூடாது. ஒரு வீட்டுக்கு மாதம் 20 ஆயிரம் லிட்டா் தண்ணீா் வழங்க வேண்டும். சொத்துவரி செலுத்தினால் மட்டுமே குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை உள்ளது. புறம்போக்கு நிலத்தில் ஏராளமானோா் வீடு கட்டி வசிக்கின்றனா். அவா்களுக்கு பொதுக்குழாய் அமைத்து தண்ணீா் வழங்க வேண்டும். 40ஆவது வாா்டு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவும், 1, 2, 3 ஆகிய வாா்டு பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து மேயா் கூறியதாவது: மாநகரப் பகுதியில் 29 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவா்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்படாது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
அதையடுத்து, குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக, தமாகா உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். மாநகராட்சியைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் கூறியது: மாநகரில் குடிநீா்க் கட்டணமாக ரூ. 160 வசூலிக்கப்படுகிறது. அதை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதுதவிர, சதுரஅடி கணக்கில் வைப்புத்தொகை கணக்கிடப்படுவதாகக் கூறியுள்ளனா். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவா். எனவே, இம்முறையைக் கைவிட வேண்டும் என்றனா் அவா்கள்.