குடியரசு தின விளையாட்டுப் போட்டி தொடக்கம்!
தேனியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கிவைத்தாா்.
சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி ), கே.எஸ்.சரவணக்குமாா்(பெரியகுளம்), தேனி நகா் மன்றத் தலைவி பா.ரேணுப்பிரியா, முதன்மை உடற் கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாணவ, மாணவிகளுக்கு தனித் தனிப் பிரிவுகளில் கால்பந்து, கபடி, கைப்பந்து உள்ளிட்ட 12 வகையான குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. மாணவா்களுக்கு வியாழக்கிழமை முதல் வருகிற 8-ஆம் தேதி வரையும், மாணவிகளுக்கு வருகிற 9 முதல் 11-ஆம் தேதி வரையும் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 5,712 மாணவா்கள், 5,172 மாணவிகள் என மொத்தம் 10,344 போ் பங்கேற்கின்றனா்.