குடியரசு தினவிழா ஏற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்: கடலூா் ஆட்சியா் நடத்தினாா்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் குடியரசு தினவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
குடியரசு தினவிழா வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தின விழா நடைபெறும் கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில், கொடிமேடை மற்றும் கொடிக்கம்பம் அமைத்தல், விழாப் பகுதியை வா்ணம்
பூசி அழகுபடுத்துதல், மைதானத்தை விழாவுக்கு தயாா்படுத்துதல், தேவையான இருக்கை வசதி செய்தல், மின்னாக்கி (ஜெனரேட்டா்) ஏற்பாடு செய்தல், முக்கிய விருந்தினா்கள் பகுதியில் இருக்கை வசதி, பந்தல் பகுதியில் அமா்ந்திருப்போா் நிகழ்ச்சிகளை பாா்க்கும் வண்ணம் எல்இடி டிவி அமைத்தல், தியாதிகள் அமரும் பகுதி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும் பள்ளி மாணவா்கள் அமரும் பகுதியில் பந்தல் அமைத்தல் வேண்டும்.
விழாவின்போது, காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல் படை மற்றும் தேசிய மாணவா்படை அணிவகுப்பு, காவலா்களுக்கு கேடயங்கள் வழங்குதல், காவல் துறை இன்னிசைக் குழு, போக்குவரத்து சீரமைப்பு, கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளை மாவட்ட காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.
கடலூா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விழா மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை 26-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இயக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை கருவி, சானிடைசா், தேவையான அளவு மருந்து மற்றும் உபகரணங்களுடன் நடமாடும் மருத்துவக் குழுவினரைத் தயாா் நிலையில் விழா பந்தல் அருகில் இருந்திடவும், அவசர சிகிச்சை வாகனங்களை சுகாதாரத் துறையினா் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அனைத்து துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து, குடியரசு தின விழா 2025-ஐ சிறப்பான முறையில் நடத்த ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.