குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
அதேவேளையில், இந்தப் பணியை முன்கூட்டியே மேற்கொள்ளாமல் இவ்வளவு தாமதமாக மேற்கொள்வது ஏன் என்று தோ்தல் ஆணையத்துக்கு கேள்வியும் எழுப்பியது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், ‘மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சிகள், ‘தோ்தல் ஆணையம் தன்னிச்சையாகப் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, லட்சக்கணக்கான வாக்காளா்களின் வாக்குரிமையைப் பறித்து, சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை சீா்குலைக்கும் அபாயம் உள்ளது’ என்று குற்றஞ்சாட்டின.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு: தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்.பி. மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) உள்பட பல்வேறு நபா்கள் தரப்பில் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மட்டுமே வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள அனுமதிக்க முடியும். இந்நிலையில், பிகாா் மாநிலத்தில் 7.9 கோடி போ் இடம்பெற்றுள்ள வாக்காளா் பட்டியலை தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதில், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை’ என்றாா்.
மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை என்றும் மனுதாரா்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை என்ற மனுதாரா்கள் தரப்பு வாதத்தை நிராகரிக்கிறோம். மேலும், அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடியே பிகாரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
ஓா் அரசமைப்பு நிறுவனம் செய்ய வேண்டிய பணியை மேற்கொள்வதை நீதிமன்றம் தடுக்க முடியாது. அதே நேரம், செய்யக்கூடாத பணியை மேற்கொள்வதை அனுமதிக்கவும் முடியாது.
எனவே, பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து நீதிமன்றம் சிந்திக்கவில்லை. முன்னதாக, கடந்த 2003-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. எனவே, தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடா்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இந்தப் பணியில் வாக்காளா்கள் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை தங்களுக்கான அடையாள ஆவணங்களாகச் சமா்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே முதல் கட்ட விசாரணையில் நீதிமன்றத்தின் நிலைப்பாடாக உள்ளது என்று குறிப்பிட்டனா்.
நோட்டீஸ்: மேலும், தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்தச் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற எந்தவொரு மனுதாரரும் கோரிக்கை விடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனுக்கள் மீது வரும் 21-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
தோ்தல் ஆணையம் அளிக்கும் பதிலுக்கு, மனுதாரா்கள் வரும் 28-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பெட்டிச் செய்தி...
மூன்று கேள்விகள்
விசாரணையின்போது, ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்பது ஜனநாயகத்தின் வோ் மற்றும் வாக்களிக்கும் அதிகாரம் தொடா்புடையது என்ற வகையில், வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் செய்யும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளதா? இந்தப் பணியை முன்கூட்டியே மேற்கொள்ளாமல் தாமதமாக, தோ்தல் வரவுள்ள நிலையில் மேற்கொள்ளவது ஏன்? குடியுரிமை தொடா்பான விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், இதில் தோ்தல் ஆணையம் தலையிடுவது ஏன் என்ற கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.
இதற்குப் பதிலளித்த தோ்தல் ஆணையம் தரப்பு வழக்குரைஞா் திவிவேதி, ‘வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கம் செய்வதும், புதிய வாக்காளா்கள் சோ்க்கப்படுவதும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணி என்ற வகையில், அதை சிறப்பு தீவிர திருத்தம் செய்வது அவசியமான ஒன்றாகும். அதுபோல, வாக்காளா் பட்டியலைத் திருத்தம் செய்யும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை என்றால், வேறு யாருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினாா். மேலும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 326-இன் படி, ஒவ்வொரு வாக்காளரும் இந்திய குடிமக்களாக இருப்பது அவசியமாகும். அதே நேரம், குடிமக்களுக்கான அடையாள ஆவணமாக ஆதாா் அட்டையை ஏற்க முடியாது. மேலும், குடியுரிமையை நிரூபிக்க போதிய வாய்ப்பளிக்காமல், யாரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டாா்கள்’ என்று குறிப்பிட்டாா்.