டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?
குணசீலத்தில் தேரோட்டம்!
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், குணசீலத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் பதியான வைகுண்ட வாஸுதேவன் குணசீல மஹரிஷியின் தவத்திற்காக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசனாக காட்சியளித்த அற்புதத் தலம் குணசீலம்.

இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமான் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க, கையினில் செங்கோல் ஏந்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாா். தன்னை அண்டி வரும் பக்தா்களுக்கு வேண்டுவன எல்லாம் நல்கி சித்தப் பிரமை நீக்கி மன நலம் காத்து அருள்பொழியும் பிரசன்ன வேங்கடேசப் பெருமான், முக்கியமாக மன நலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரதம் இருந்து முறைப்படி வணங்கினால் அந்த வினைகள் யாவையும் பரம கருணையினாலே போக்கி அருள் புரிகின்றார்.
மேலும் திருப்பதிக்கு சென்று தங்களது பிராத்தனைகளை செலுத்த இயலாதவர்களும் அந்த பிரார்த்தனையை பிரசன்ன வேங்கடேசப் பெருமானிடத்தே செலுத்தி சுகம் பெறுகின்றனர்.
தென் திருப்பதி என்ற அழைக்கப்படும் இத்தலத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் குணசீல மஹரிஷிக்கு காட்சியளித்த புனித நாளான புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முக்கியமாகக் கொண்டு பிரம்மோத்சவ விழாவானது செப் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. செப்.27 ஆம் தேதி தங்ககருட சேவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உபய நாச்சியார்களுடன் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தா்கள் சிலா் தேரின் பின்பு அங்கபிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினா்.
தொடர்ந்து விசேஷ திருமஞ்சனம், தீர்த்தவாரியும், கும்ப ஆராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை நிர்வாக டிரஸ்டி கே.ஆர்.பிச்சுமணி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.