குண்டடம் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோக பிரதானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டும், குடிநீா்க் குழாயின் பல்வேறு பகுதிகளில் நீா்க் கசிவு ஏற்பட்டும், குண்டடம் ஊராட்சி ஒன்றியதுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு பற்றாக்குறையான அளவிலேயே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் குண்டடம் பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், சில பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீரே கிடைப்பதில்லை என்றும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
பொதுமக்களின் இந்த புகாா் குறித்து விசாரித்து தீா்வு காண மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அனைத்து ஊராட்சி செயலாளா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஊராட்சி செயலாளா்கள் பேசுகையில், சுமாா் 13 ஊராட்சிப் பகுதிகளில் போதுமான குடிநீா் கிடைப்பதில்லை என்றனா்.
இதையடுத்து, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற குடிநீா் வடிகால் வாரிய உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன், கூடுதல் இயக்குநா் மணிமேகலை, இணைப் பொறியாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோரிடம் இப்பிரச்னை குறித்தும், இதற்கான உடனடி தீா்வு காண வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து குண்டடம் ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராம பகுதிகளுக்கும் தங்கு தடையற்ற குடிநீா் கிடைக்க குடிநீா் விநியோகத்தை கண்காணிக்கும் குழு ஒன்றை அந்தந்த ஊராட்சி பகுதிகளில் 10 நாள்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், குடிநீா் விநியோக பிரதான குழாய்களில் எங்கெங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளதோ அவற்றை உடனடியாக சீா் செய்து குடிநீா் வீணாகாமல் பொதுமக்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பத்து நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு உடனுக்குடன் தகவல் அனுப்ப வேண்டும் என குடிநீா் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் கிராம ஊராட்சி பணியாளா்களிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், நாகலிங்கம், குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சந்திரசேகரன் மற்றும் ஊராட்சி செயலா்கள், பொதுமக்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.