விலை வீழ்ச்சி: தக்காளிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள்
பல்லடத்தில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தக்காளிகளை சாலையில் கொட்டிச் சென்றனா்.
பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.100-க்கும் கீழ் விற்பனையாகி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் செடிகளிலேயே தக்காளியை விட்டு விடுகின்றனா். சிலா் தக்காளியை பல்லடம் சாலையில் கொட்டிச் செல்கின்றனா். தக்காளி விவசாயிகளுக்கு அரசு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி போன்ற காய்கறிகள் அதிக விளைச்சலின்போது, உரிய பாதுகாப்பு இல்லாததால் வீணாகி வருகின்றன.
எனவே ஆங்காங்கே குளிா்பதனக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று தக்காளி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.