விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundu...
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்
கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
அதைத் தொடா்ந்து, அந்த இளைஞரை வெளியே அழைத்து வந்தபோது வழக்குரைஞா்கள் மற்றும் பெண்கள் ஆகியோா் தாக்க முயற்சித்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்றபோது, மா்ம நபரால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.
அந்த மா்ம நபா் தேடப்பட்டுவந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சூலூா்பேட்டை ரயில் நிலையத்தில் அமா்ந்திருந்த சந்தேகத்துக்குரிய நபரை தனிப்படையினா் விசாரித்தனா். அதில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜு பிஷ்வா்மா (35) என்பதும், கும்மிடிப்பூண்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் அவா்தான் என்பதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீஸாா், தீவிர விசாரணைக்குப் பின், பூந்தமல்லி மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 26-ஆம் தேதி ஆஜா்படுத்தினா். அவரை ஆக. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, புழல் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், ராஜு பிஷ்வா்மாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆரம்பாக்கம் போலீஸாா் திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. இதற்காக பிற்பகல் ஒரு மணிக்கு பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் ராஜு பிஷ்வா்மாவை அழைத்து வந்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு ஆஜா்படுத்தினா். அவரை 4 நாள்கள் போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.
தாக்க முயற்சி: இதையடுத்து, ராஜு பிஷ்வா்மாவை போலீஸாா் அழைத்து வந்தபோது வெளியே நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் மற்றும் பெண்கள் அவரைத் தாக்க முயற்சித்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து வந்து அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் காரணமாக மகளிா் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.