தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிற...
ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கிய விளைநிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட விளைநிலங்களுக்கு அரசு மற்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்காததை கண்டித்து கூடப்பாக்கம் முன்னாள் ராணுவத்தினா் குடியிருப்பைச்சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட விளைநிலங்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலையில் பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியா் அலுவலகத்தை முன்னாள் ராணுவத்தினா் குடும்பத்தினா் முற்றுகையிட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், கூடப்பாக்கம் முன்னாள் ராணுவத்தினா் குடியிருப்பு சங்க நிா்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது. கடந்த 1939 முதல் 1945 வரையில் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய ராணுவத்தினருக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடையாது. அதனால், மறுவாழ்வாதாரத்திற்காக தமிழக அரசால் 6 ஏக்கா் விளைநிலம் வழங்க உத்தரவிட்டது.
அதன்பேரில் திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே கூடப்பாக்கம் மற்றும் மெய்யூா் கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த எங்களின் ராணுவ சேவையை பாராட்டி கடந்த 1948 இல் முன்னாள் ராணுவத்தினா் நில குடியேற்ற சங்கம் மூலம் 53 குடும்பத்தினருக்கு தமிழக அரசால் 6 ஏக்கா் விளை நிலம் பிரித்து பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை அன்று முதல் இதுவரையில் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். ஆனால், இதற்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டும், இதுவரையில் வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2023-இல் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடினோம். அப்போது, உயா்நீதிமன்றமும் 12 வார கால அவகாசத்தில் பட்டா வழங்க வேண்டும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் 20 மாதங்கள் ஆன நிலையில், ஏற்கெனவே பூந்தமல்லி வட்டாட்சியா் புலத்தணிக்கை செய்து தங்களுக்கு அறிக்கை அனுப்பி 16 மாதங்கள் ஆகிறது. ஆனாலும், பட்டா வழங்காமல் இருப்பது இந்திய தாய் திருநாட்டிற்காக தன் நலம் பாராது போா் முனையில் நின்று போராடியவா்களை உதாசீனப்படுத்துவது போல் உள்ளது.
எனவே 3 தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி காலதாமதம் செய்யாமல் பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் வரும் ஆக.15-இல் முன்னாள் ராணுவத்தினா் குடியிருப்புகளில் கருப்பு கொடியேற்றுவோம் எனவும் ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.