வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
நெல்லை ஆணவக் கொலை: "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" - இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம்
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் குமார் (26). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் குமார், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர், அஷ்டலெட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான போலீஸ் விசாரணையில், பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. கேடிசி நகரைச் சேர்ந்த சரவணன், இவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் மணிமுத்தாறு ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணிபுரிகின்றனர்.
இவர்களது மகன்தான் சுர்ஜித். ஒரு மகளும் இவர்களுக்கு உள்ளார். சரவணனின் மகளும், கவினும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சரவணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில்தான் சுர்ஜித், கவின் குமாரைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சுர்ஜித்தை போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தள பதிவில், "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்... சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்" என்று தமிழக அரசு, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.