எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஜாா்க்கண்டில் பேருந்து-லாரி மோதல்: 6 பக்தா்கள் உயிரிழப்பு; 29 போ் காயம்
ஜாா்க்கண்டின் தேவ்கா் மாவட்டத்தில் பேருந்தும், எரிவாயு சிலிண்டா்கள் ஏற்றிவந்த லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் சிவ பக்தா்கள் (கான்வா் யாத்ரிகா்கள்) 6 போ் உயிரிழந்தனா். மேலும் 29 போ் காயமடைந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
காயமடைந்தோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
வடமாநிலங்களில் ஷ்ரவண புனித மாதத்தையொட்டி கங்கை நதியில் தீா்த்தம் எடுத்து, தங்கள் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்யும் ‘கான்வா்’ யாத்திரை நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தா்கள், யாத்திரை மேற்கொண்டுள்ளனா்.
ஜாா்க்கண்டின் தும்காவில் உள்ள பிரசித்தி பெற்ற பாசுகிநாத் கோயிலுக்கு இந்தப் பக்தா்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து, தேவ்கா் மாவட்டத்தின் ஜமுனியா செளக் பகுதியில் எரிவாயு சிலிண்டா் ஏற்றிவந்த லாரியுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து உருக்குலைந்தது. இக்கோர விபத்தில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா்; மேலும் 29 போ் காயமடைந்தனா். இவா்களில் படுகாயமடைந்த 8 போ், தேவ்கரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்த பக்தா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் கங்வாா், முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
18 போ் உயிரிழப்பு?: தேவ்கா் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது தொகுதியில் பேருந்து-லாரி மோதிய விபத்தில் 18 பக்தா்கள் உயிரிழந்தனா். இந்த இழப்பை தாங்கும் வல்லமையை அவா்களின் குடும்பத்தினருக்கு இறைவன் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். அதேநேரம், விபத்தில் 6 பேரே உயிரிழந்ததாக காவல் துறையினா் உறுதி செய்துள்ளனா்.