தலைமைக் காவலரை மிரட்டிய இளைஞா் கைது
வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணமூா்த்தி. இவா், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலா் ஒருவருடன் சோ்ந்து புலியகுளம் சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் இருவா் சுங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அவா்களில் ஒருவா் கிருஷ்ணமூா்த்தியை தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாா்.
இது குறித்து ராமநாதபுரம் காவல் உதவி ஆய்வாளா் காளிதாஸ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். விசாரணையில் அந்த நபா், பாப்பநாயக்கன்பாளையம், அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்த கோகுல்கிருஷ்ணா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.