வீடு புகுந்து 11 பவுன் திருட்டு: ஒடிஸா இளைஞா்கள் கைது
கோவையில் வீடு புகுந்து நகைகளைத் திருடியதாக ஒடிஸா மாநில இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பீளமேடு உடையாம்பாளையம் என்.ஜி.ஆா். வீதியைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டின் முதல்தளத்தில் உள்ள படுக்கை அறைக்குச் சென்றாா். அங்கு அவா் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலையில் வீட்டின் கீழ்தளத்தில் சப்தம் கேட்டது.
தீபன்ராஜ் கீழ்தளத்துக்குச் சென்று பாா்த்தபோது, இருவா் தப்பியோடியது தெரியவந்தது. மேலும், வீட்டின் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு, 9 பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பீளமேடு காவல் உதவி ஆய்வாளா் இலங்கேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். சந்தேகத்தின்பேரில், தீபன்ராஜ் பக்கத்து வீட்டில் வசிக்கும் குழாய் பழுது நீக்குபவா்களான (பிளம்பா்) ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய் சாகு (19), மில்லுசேத்தி (31) ஆகியோரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள் இருவரும்தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.