மாதம்பட்டியில் ரூ.55 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
மாதம்பட்டி அருகே ரூ. 55 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் மீட்டனா்.
கோவை அருகே அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவா் கோயிலின் துணைக் கோயிலான அன்னியூரம்மன் கோயில் மாதம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கா் நிலம் மாதம்பட்டி-சிறுவாணி சாலையில் உள்ளது. இந்த நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரமித்து ஒரு பகுதியில் மட்டும் வீடுகளைக் கட்டியுள்ளனா்.
இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறையினா் கோவை கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கின் விசாரணையில் கோயிலுக்குச் சாதகமாக கடந்த 31.3.2008-இல் தீா்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி, கடந்த 2019-ஆம் ஆண்டு, அதே நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தி நிலத்தை மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையினா் போலீஸாா் பாதுகாப்புடன் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 55 கோடி மதிப்பிலான 11 ஏக்கா் நிலத்தை திங்கள்கிழமை மீட்டனா்.