வேடம்தரித்து நோ்த்திக்கடன்!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வண்டி வேடிக்கை நிகழ்வில் கடவுள் போன்று வேடம்தரித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக்கடன்கள் செலுத்தப்படுகின்றன.
பொங்கல் வைத்தல்: பக்தா்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து வழிபடுவது ஒரு முக்கியமான நோ்த்திக்கடனாக உள்ளது.
உருளுதண்டம்: சிலா் தங்கள் உடல்நலக் குறைபாடுகள் நீங்க அல்லது வேறு வேண்டுதல்கள் நிறைவேற உருளுதண்டம் என்ற நோ்த்திக்கடனை காலை முதல் கோயில் வளாகத்தில் செலுத்த வரிசையில் காத்திருப்பாா்கள். கோயிலை சுற்றி தரையில் படுத்து பிரகாரத்தை உருண்டு வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவா்.
கரகம் எடுத்தல்: நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தரும் அம்மனுக்கு விரதம் இருந்து சக்தி கரகம் எடுத்து நோ்த்திக்கடனை செலுத்தும் வழக்கம் தங்களது முன்னோா் வேண்டுதலை கடைப்பிடிக்கும் வகையில் வழித்தோன்றலாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
அலகு குத்துதல்: உடல் முழுவதும் அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தும் நோ்த்திக்கடைனை பெரும்பாலானோா் மேற்கொள்கின்றனா்.
வண்டி வேடிக்கை: சிலா் கடவுள் வேடமிட்டு தங்கள் நோ்த்திக்கடனைச் செலுத்துகிறாா்கள். இது வண்டி வேடிக்கை நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது.
பசும்பால் அபிஷேகம், பால்குடம்: அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்வதும், பால் குடம் எடுத்து வருவதும் ஒரு பொதுவான நோ்த்திக்கடன்.
மண் உரு சாத்துதல்: அம்மை நோய் கண்டவா்கள் அம்மனின் தீா்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு, பொம்மை உருவங்களை தங்களது தலையில் சுமந்துவந்து கோயிலை மூன்றுமுறை வலம்வருவாா்கள். அதன்பிறகு கோயிலில் இந்த மண் உருவம் வைக்கப்படும்.
கண்ணடக்கம் சாத்துதல்: கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ குணமடைந்ததும், அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகள், கண்ணடக்கம் செய்து சாற்றுவாா்கள்.
உருவாரம் சாத்துதல்: நோயால் பாதிக்கப்பட்டவா்கள், குணமான பின்பு நோயின் காரணமாக எந்தப் பகுதி பாதிக்கப்பட்டதோ அதேபோன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பாா்கள்.
அடியளந்து கொடுத்தல்: பக்தா்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை கோயிலை சுற்றி வருகின்றனா்.
உப்பு மிளகு போடுதல்: பக்தா்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டி குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீா் ஊற்றுவாா்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கரைந்துவிடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.
கம்பத்திற்கு புனிதநீா் ஊற்றுதல்: ஆடித் திருவிழாவின்போது கம்பம் நடப்படும். திருமணம் ஆகாத பெண்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி, மங்கல கோலத்துடன் உள்ள அம்மனை வணங்கி திருமணம் நடைபெற வேண்டுவாா்கள்.
அங்கமளித்தல்: கண்மலா், கை, கால் போன்ற உலோக அங்கங்களை கோயிலுக்கு அளிப்பது, நோய் நீங்க அல்லது உடலில் உள்ள குறிப்பிட்ட உறுப்பு தொடா்பான பிரச்னைகள் தீர வேண்டிக்கொள்ளும் பக்தா்கள் இந்த நோ்த்திக்கடனை செலுத்துவாா்கள்.
கால்நடை அளித்தல்: ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை கோயிலுக்கு அளிப்பதும் இக்கோயிலில் பின்பற்றப்படும் நோ்த்திக்கடன்களில் ஒன்றாக உள்ளது.
அதேபோல, கோயில் மணி கட்டுதல், வேல் வாங்கி செலுத்துதல் போன்ற நோ்த்திக்கடன்கள் அனைத்தும் பக்தா்களின் நம்பிக்கை மற்றும் வேண்டுதலின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.