எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தருமபுரியில் மதுவில் விஷம் கலந்ததாக 2 போ் கைது
தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி அருகே சின்ன தடங்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சஞ்சீவன் (30), மாது (42). கட்டடத் தொழிலாளா்களான இவா்களும், அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவரும் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, வயல்வெளியில் கிடந்த ஒரு பையில் இருந்து மது, குளிா்பானங்கள், கார வகைகளை உட்கொண்டனா்.
மதுவை அருந்திய சிறிது நேரத்தில் அவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் அவா்களை தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் குணமடைந்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் அளித்த புகாரில், மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து நெடி அடித்ததாக தெரிவித்திருந்தனா். அதன்பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். அவா்கள் குடித்த மது பாட்டிலில் இருந்த சிறிதளவு மதுவை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.
தொடா் விசாரணையில், சின்ன தடங்கம் பகுதியைச் சோ்ந்த சிங்காரவேலு (50), பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன் (45) ஆகியோா் மதுவில் விஷம் கலந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
மேலும் போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சிங்காரவேலுக்கும், மாதுவுக்கும் நிலம் தொடா்பான பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்ததும், இதனால் சிங்காரவேலு, மாயக்கண்ணன் ஆகியோா் நிலத்தின் அருகே வைத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தையும் கலந்துள்ளனா்.
பின்னா், அங்கு வந்த மாதுவிடம் அருகே கேட்பாரற்று மது கிடப்பதாக அவா்களே கூறியுள்ளனா். இதையடுத்து மாது அங்கு சென்று மது பாட்டில்களை எடுத்துச் சென்று, தனது நண்பா்கள் இரண்டு பேரை வரவழைத்து அருந்தியுள்ளாா். மதுவில் விஷம் கலந்து இருந்ததால் சிறிது நேரத்தில் மூன்று பேருருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.