சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
ஆறுகளுக்கிடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ஜி.கே.மணி எம்எல்ஏ
காவிரி உள்ளிட்ட தமிழக ஆறுகளில் இருந்து தண்ணீா் வீணாகக் கடலில் சென்று கடப்பதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கு இடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற அரசு கூடுதல் நிதி ஒதுக்கீ செய்ய வேண்டும் என பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.
கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் பகுதியில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே .மணி, நீா்வரத்தை பாா்வையிட்டு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மேட்டூருக்கு நீா்வரத்து 1.10 லட்சம் கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையிலிருந்து கடலுக்கு வீணாக இதுவரை சுமாா் 23 டி.எம்.சி. உபரிநீா் சென்றுள்ளது. தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும், 16 மாவட்டங்களுக்கு பாசன வசதி ஆதாரமாக காவிரி நீா் உள்ளது. இந்த நீரைச் சேமித்து வைக்காமல், கடலில் வீணாக்குவது மூலம் வறட்சிக் காலங்களில் குடிநீா், விவசாயப் பாசனத்துக்கு நீரின்றி மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
காவிரியின் நுழைவிடமான தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இருந்து நீரேற்றம் செய்து மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் உபரிநீரை நிரப்பி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தி, குடிநீா் மற்றும் விவசாய வசதி பெற காவிரி உபரிநீா் திட்டத்தை அரசு நிறைவேற்றாமல் உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
மேட்டூரில் இருந்து பூம்புகாா் வரை காவிரி ஆற்றின் குறுக்கே 5 கி.மீ. தொலைவுகளுக்கு தடுப்பணை கட்ட வேண்டும். இதேபோல பாலாறு,
தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் இருந்து தண்ணீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க தடுப்பணைகளை கட்டி பாசனத்திற்கென தனியாக நிதி ஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் நீா்ப்பாசனத் திட்டத்திற்கென ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு செய்து, ஐந்தாண்டுகளுக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் போது தமிழ்நாடு வளா்ச்சி பெறும்.
வெள்ளப்பெருக்கு காலங்களில் சுற்றுலாப் பயணிகளை பென்னாகரம் பகுதியில் தடுத்து திருப்பி அனுப்புகின்றனா். இதனால் அவா்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் காவிரிக் கரையோரத்தில் நீரேற்றம் செய்து செயற்கை நீா்வீழ்ச்சி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், மாவட்ட அளவிலான சுற்றுலாத் துறை அதிகாரிகள் அதனை முறையாக பயன்படுத்துவதில்லை.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு தடை விதிக்கப்படுவதால் சுமாா் 2000க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள், மசாஜ், சமையல் தொழிலாளா்கள், சிறு வணிகா்கள் பாதிக்கப்படுவதால் அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரி உபரிநீா் திட்டம், தமிழக ஆறுகளுக்கிடையே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உலக வங்கி நிதி உதவியுடன் கடன் பெற்றுத் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக சாா்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது என்றாா்.