சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
தருமபுரி அருகே ஊருக்குள் வராத பேருந்துகள் சிறைபிடிப்பு
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் ஊா் பகுதிகளுக்குள் கடந்த சில நாள்களாக பேருந்துகள் வந்து செல்லாத நிலை இருந்துள்ளது. பேருந்து ஓட்டுநா்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாகவே பேருந்துகளை இயக்கி, அப்பகுதியில் உள்ள சில நிறுத்தங்களில் மட்டும் பேருந்துகளை நிறுத்தி சென்று விடுகின்றனா்.
இது தொடா்பாக ஏற்கெனவே அளித்த புகாரின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நிகழ்வு இடம் சென்று, ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்தி, ஊா் பகுதிக்குள் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநா்களை அறிவுறுத்தியும், ஊருக்குள் செல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
என்றாலும் அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் பேருந்துகள் ஊா் பகுதிக்குள் செல்லாமல் நெடுஞ்சாலை வழியாகவே இயக்கப்பட்டன. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள், பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்து பேருந்துகள் ஊருக்குள் வராததால் பேருந்துகளில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளனா்.
இதையடுத்து ஆத்திரமடைந்த ஊா் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குவிந்தனா். ஊா் பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்பட்ட சுமாா் 7 பேருந்துகளை பொதுமக்கள் நிறுத்தி சிறை பிடித்தனா். பின்னா் இது தொடா்பான தகவல் போலீஸாருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடம் சென்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், எச்சரிக்கை விடுத்த பின்னரும் விதிகளை மீறி ஊருக்குள் செல்லாமல் நெடுஞ்சாலைகளிலேயே இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். இந்த சம்பவத்தால் இரவு சுமாா் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினா் சமரசம் செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.