எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி மீது புகாா்: வழக்குரைஞா், மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்
தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக புகாா் கூறி வழக்குத் தொடுத்த மனுதாரா், வழக்குரைஞருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தெலங்கானா முதல்வருக்கு எதிராக பட்டியலினத்தவா் சட்டப் பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கை தெலங்கானா உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்ததில் தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறி என். பெட்டீ ராஜு என்பவா் உச்சநீதிமன்ற பதிவு பெற்ற வழக்குரைஞா் ரிதேஷ் பாட்டீல் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு, ‘நீதிபதிகளுக்கு எதிராக இதுபோன்ற அபத்தமான குற்றம்சாட்டுவதை அனுமதிக்க முடியாது. வழக்குரைஞா்களைப் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இதுபோன்ற நடத்தையை மன்னிக்க முடியாது. ஆகையால், வழக்கை தொடுத்தவருக்கும், வழக்குரைஞருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. இதற்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் அவா்கள் பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.
இதையடுத்து மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு வழக்குரைஞா் ரிதேஷ் பாட்டீல் கேட்டுக் கொண்டாா். இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமா்வு, ‘மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதில் உண்மையான காரணம் உள்ளதா? இல்லையா? என்ற அடிப்படையில் மனு பரிசீலிக்கப்படும்’ எனறு தெரிவித்தது.