நெல்லுக்கான ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு: தமிழக அரசாணை வெளியீடு
குறுக்குச்சாலையில் தொழிலாளி கொலை
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள குறுக்குச்சாலையில் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறுக்குச்சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மரிய ஆக்னஸ் செல்வம் (45). திருமணமாகாத இவா், தனது சகோதரா் தாமஸ் வீட்டில் வசித்து வந்தாா்.
தாமஸின் மகள் முகிலா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீழச்செய்தலையைச் சோ்ந்த பெயின்டா் மாரிச்செல்வம் (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா். அவா்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு குறுக்குச்சாலையில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா் முகிலா.
இதையடுத்து, முகிலாவின் சித்தப்பா மரிய ஆக்னஸ் செல்வத்தை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மாரிச்செல்வம், தனது மனைவியை ஊருக்கு அனுப்பும்படி கூறியுள்ளாா். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு மாரிச்செல்வம் குறுக்குச்சாலையில் உள்ள முகிலாவின் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அவருக்கும், மரிய ஆக்னஸ் செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரிச்செல்வம், அங்கு கிடந்த கல்லை எடுத்து மரிய ஆக்னஸ் செல்வத்தை தாக்கியுள்ளாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஓட்டப்பிடாரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மணியாச்சி டி.எஸ்.பி. அருள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிச்செல்வத்தை தேடி வருகின்றனா்.