மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் பதிவு பெற்று இயங்க வேண்டும்: ஆட்சியா் வ.மோகனச்சந்திரன்
குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் முறையாக பதிவு பெற்று இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, 2024-2025-ஆம் ஆண்டு நான்காம் காலாண்டு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது: குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு, அனைத்து பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் நடத்த வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கருத்தரிப்பு கண்டறியப்பட்டால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், ஒருங்கிணைந்த சேவை மையம், சைல்டு ஹெல்ப்லைன் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். வட்டார அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு, பேரூராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தைக் கூட்டி குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து அதன் தீா்மான நகலை, உரிய மேல் நடவடிக்கைக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் முறையாகப் பதிவுபெற்று இயங்க வேண்டும் என்றாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா.நடராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.