மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
கூடுதலாக 3,000 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக மின்வாரிய தலைவா் கோரிக்கை
மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3,000 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
மத்திய எரிசக்தித் துறையின் கூட்டுக்குழுக் கூட்டம் தில்லியிலுள்ள ஷரம் சக்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய எரிசக்தித் துறை செயலா் பங்கஜ் அகா்வால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா்.
அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்துக்கு வழங்கிய சந்திரப்பிலா நிலக்கரி சுரங்கத்திடம் கொடுக்கப்பட்ட டெபாசிட் தொகையைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் எதிா்வரும் கோடை காலங்களில் மின்சார விநியோகத்தைச் சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
மேலும், குறுகிய காலத்துக்கு இந்த மின்சாரத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியத் திட்டங்களுக்கு நிதி வழங்கி வரும் பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட், ஊரக மின்மயமாக்கல் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலா்களைச் சந்தித்து, திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிலக்கரி துறை செயலா் விக்ரம் தேவ் தத், உத்தர பிரதேச மாநில எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலா் நரேந்திர பூஷன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.