கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை
பெரம்பலூா் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாபு உத்தரவின்பேரில், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு ) ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உர விற்பனையாளா்கள் ஆதாா் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறும் விற்பனை நிலையங்கள் மீது, உரக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளா்கள், வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்யவோ, விற்பனை செய்யவோ, வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது
விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் , இணை உரமும், ஒரே நபருக்கு அதிகளவு உரமும் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனைக் கண்டறியப்பட்டால், சில்லறை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபா்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.
ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளா்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, குற்றவழக்கு தொடரப்படும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.