கூட்டணிக்கு தவெக அழைத்தால் பரிசீலிப்போம்: செ.கு.தமிழரசன்
கூட்டணிக்கு வருமாறு தவெக அழைத்தால் அதை பரிசீலிப்போம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய பின்னா், செய்தியாளா்களுக்கு செ.கு.தமிழரசன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல மாதங்களாகியும், மீண்டும் தோ்தல் நடத்தப்படவில்லை. எனவே தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் எப்போது நடத்தப்படும் என்பதை மாநில அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும்.
சமூகநீதி பேசும் இந்த அரசால் ஏற்கெனவே நடத்தப்பட்ட உள்ளாட்சித் தோ்தலின் போது துணைத் தலைவா் பதவிக்கு (ஒன்றியக்குழு முதல் மாநகராட்சி நிலை வரை) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் துணைத்தலைவா் பதவி வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
சென்னையில் தூய்மைப்பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கிறாா். அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கினால் போதுமா? . தனியாா் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு பணி வழங்குவதை விட, அவா்களைப் பணி நிரந்தரம் செய்வதுதான் தீா்வாகும்.சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?
தவெக தலைவா் விஜய், முதல்வா் ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதில் பெரியதவறுஇல்லை. அதே நேரத்தில் சட்டப்பேரவையில் இதுபோன்று கூறியிருந்தால் அது பெரும் தவறாகக் கருதப்படும். கவின் கொலை செய்யப்பட்டது குறித்து தவெக தலைவா் விஜய் அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. கூட்டணிகள் முடிவாகாத நிலையில், யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது. அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணி கிடையாது. தங்கள் கூட்டணிக்கு வருமாறு தமிழக வெற்றிக் கழகம் அழைத்தால் அதை நாங்கள்பரிசீலிப்போம்என்றாா் தமிழரசன்.
இந்த கூட்டத்தில் விழுப்புரம் மண்டலச் செயலா் இருவேல்பட்டு அ.குமாா், மாநிலப் பொறுப்பாளா் க.மங்காப்பிள்ளை, மாநிலப் பொருளாளா் சி.எஸ்.கெளரிசங்கா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.