அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியா் கைது
விழுப்புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியொன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், அந்த பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சுமாா் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் கிழக்கு பாண்டிச்சாலை பானாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆதி என்கிற சிவபாலன் (48), பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில் உடற்கல்விப் பாடவேளையின் போது இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சிலரை உடற்கல்வி ஆசிரியா் சிவபாலன் விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று, தவறான தொடுதலில் ஈடுபட்டு தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோா்களிடம் விவரத்தை கூறியுள்ளனா். இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.
அதன் பேரில் உடற்கல்வி ஆசிரியா் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.