கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்
சேலம் மாவட்டம், கூலமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 34 போ் காயமடைந்தனா்.
ஆத்தூரை அடுத்துள்ள கூலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக அரசு விதிமுறைகள் குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாசித்தாா். தொடா்ந்து மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உறுதிமொழி ஏற்றனா். ஜல்லிக்கட்டுப் போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் பாய்ந்து சென்றனா். இதில் பாா்வையாளா்கள் 31 போ், மாடுபிடி வீரா் ஒருவா், காளைகளின் உரிமையாளா்கள் 2 போ் உள்பட 34 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 போ் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். காளை ஒன்றின் இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தக் காளைக்கு கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா்.
ஜல்லிக்கட்டு விழாவிற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் 313 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். வட்டார மருத்துவ அலுவலா் விஜயபாஸ்கா் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற 550 டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் 380 மாடுகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டதால் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநிலச் செயலாளா் வசந்தகுமாா் தலைமையில் விழாக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் நெரிசல் ஏற்பட்டது.
இந் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன்,ஆத்தூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) செ.ராஜன், காவல் துணை கண்காணிப்பாளா் கே.சி.சதீஷ்குமாா், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் பாரதி, முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், கு.சின்னதுரை,ஆத்தூா் வட்டாட்சியா் பாலாஜி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
1. கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடிசயைத்து தொடங்கி வைத்த சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உள்ளிட்டோா்.
2. சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.