பொங்கல் சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.16.48 கோடி வருவாய்: சேலம் கோட்ட அதிகாரிகள் தகவல்
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 16.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 1,900 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த சிறப்புப் பேருந்துகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூா், திருவண்ணாமலை, பெங்களூரு, ஒசூா், வேலூா் உள்பட பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்பட்டன. வழக்கமான பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்துக்கு நடப்பாண்டு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன், 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் கடந்த 5 நாள்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ. 16 கோடியே 48 லட்சம் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரூ. 15 கோடியே 95 லட்சம் வசூலானது. கடந்தாண்டை காட்டிலும் ரூ. 53 லட்சம் அதிகம் வருவாய் கிடைத்துள்ளது என்றனா்.