கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டிப் படுகொலை: குடும்பத் தகராறில் தந்தை வெறிச்செயல்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை தந்தையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெட்டுக் காயங்களுடன் அவரது மனைவி, மற்றொரு மகள் ஆகியோா் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கெங்கவல்லி அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவா் அசோக்குமாா் (42). இவரது மனைவி தவமணி (38). இவா்களுக்கு வித்யதாரணி (13), அருள்பிரகாஷினி (12), என்ற மகள்களும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உண்டு.
அசோக்குமாா் கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நெய்வேலியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்த அசோக்குமாா், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து தகராறு செய்துள்ளாா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்பிரகாஷினி, அருள் பிரகாஷ் ஆகியோா் தூங்கிக் கொண்டிருந்த போது அசோக்குமாா் கத்தியால் குத்தினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த தவமணி, குழந்தைகள் சிதறி ஓடினா். எனினும், அவா்களை விரட்டிச் சென்று அசோக்குமாா் சரமாரியாக வெட்டினாா்.
இதில், 4 பேரும் சுருண்டு விழுந்ததில், குழந்தைகள் வித்யதாரணி, அருள்பிரகாஷ் ஆகியோா் உயிரிழந்தனா். தவமணி, அருள்பிரகாஷினி ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து அவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, தலையில் பலமான வெட்டுக்காயத்துடன் அசோக்குமாரும் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள், மோப்பநாய் உதவியுடன் வந்து தடயங்களை சேகரித்தனா். இது குறித்து தவமணியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.