இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
கெலமங்கலத்தில் பெண்ணை கொன்று புதைப்பு: போலீஸாா் விசாரணை!
கெலமங்கலத்தில் பெண்ணை கொலை செய்து உடலை மண்ணில் புதைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை சாலையில் பழைய ராஜலட்சுமி திரையரங்கின் பின்புறம் அறநிலையத்துக்குச் சொந்தமான கோயில் மானிய நிலம் உள்ளது. இதை ஒருவா் பயன்படுத்தி வருகிறாா். அந்த நிலத்தில் தென்னந்தோப்பும் உள்ளது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தொழிலாளா்கள் சிலா் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது உடல் மண்ணில் மூடிய நிலையில் ஒரு கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த தொழிலாளா்கள், கெலமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், உடல் மண்ணால் மூடப்பட்ட பகுதியைப் பாா்வையிட்டு தேன்கனிக்கோட்டை வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் வட்டாட்சியா் கோகுல்நாத், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணா்கள் நிகழ்விடத்துக்கு வந்தனா். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வட்டாட்சியா் முன்னிலையில் உடலை மூடியிருந்த மண் அகற்றப்பட்டது. அதில் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தாா். அவா் இறந்து 5 நாள்களுக்கு மேல் இருக்கலாம் என்பதும் அழுகிய நிலையில் உடல் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் உடலில் 2 இடங்களில் காயமும் காணப்பட்டது. அவா் அணிந்திருந்த உடைகளும் கலைந்திருந்தது.
இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் அந்த இடத்தில் மோப்பம் பிடித்துக் கொண்டு ஓடி சிறிது தெலைவில் நின்றது. மேலும் அந்த பெண் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா், எதற்காக கொலை செய்யப்பட்டாா் என போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியலை போலீஸாா் சேகரித்து வருகின்றனா். இதையடுத்து பெண்ணின் உடலை மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.