கேதார்நாத் கோயில் நடை திறப்பு!
கேதார்நாத் கோயிலின் நடை இன்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தரக்கண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்களில் ஒன்றாகவும், சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றில் கரையில் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களில் கோயில் நடை திறக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான சார் தாம் யாத்திரை இன்று தொடங்கியது. முன்னதாக பாதுகாப்பு காரணக்களுக்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கேதார்நாத் கோயிலை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கிவைத்தார்.
முன்னதாக, தலைமை அர்ச்சகரால் மத சடங்குகள் நடத்தப்பட்டன. கோயிலில் பலவித வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் திறப்பு விழாவின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையில் கேதார்நாத் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு காலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.