கேரளத்தை மினி பாகிஸ்தான் என விமர்சித்த பாஜக அமைச்சர்!
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான நிதிஷ் ரானே கேரளத்தை மினி பாகிஸ்தான் என விமர்சித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நிதிஷ் ராணே மகாரஷ்டிர முன்னாள் முதல்வரான நாரயண ராணேவின் மகனாவார். இவர் சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கான்கவில் தொகுதியில் வெற்றி பெற்றார்.
புனே மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி அப்சல் கானைக் கொன்ற வரலாற்று நினைவைக் கொண்டாட்டும் விதமாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நிதீஷ் ராணே, “கேரளம் மினி பாகிஸ்தானைப் போன்றது. அதனால் தான் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் அங்குப் போட்டியிடுகின்றனர். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். அதுதால் உண்மை. அவர்கள் பயங்கரவாதிகள் உதவியுடன் எம்.பி.யாகியுள்ளனர்” என பேசினார்.
இதையும் படிக்க | பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்! பேருந்து, ரயில் சேவை பாதிப்பு
அவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் பாடில், “நிதிஷ் ராணேவிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். நான் ஃபட்னவீஸ், நரேந்திர மோடியிடம் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பதாக அமைச்சராகப் பொறுப்பேற்ற போது பதவிப் பிரமாணம் செய்த நிதிஷ் ராணே, நாட்டின் மாநிலத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவது சரியா? வாக்காளர்களை பயங்கரவாதிகள் என்று அவர் கூறுகிறார். அவர் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. காலை முதல் மாலை வரை நிதீஷ் ராணே வகுப்புவாதத்தை மட்டுமே பரப்புகிறார். தேசபக்தர் என சொல்லிக்கொள்ளும் நீங்கள் அவரை இன்னும் ஏன் பதவியில் விட்டுவைத்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.