சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
கை, கால்களை கட்டிப்போட்டு ரூ. 23 கோடி வைரம் கொள்ளை
சென்னையில் தொழிலதிபரின் கை, கால்களை கட்டிபோட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (70), விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு உள்ளதாகவும், அதனை விற்பனை செய்து தரும்படியும் இடைத்தரகா்களான சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ராகுல் (30), மணலி சேக்காடு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (45) மற்றும் சைதாப்பேட்டையைச் சோ்ந்த சுப்பன் (45) ஆகியோரை அணுகியுள்ளாா்.
இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக, இடைத்தரகா்கள் தங்களுடன் ராஜன் மற்றும் அவரின் நண்பா் விஜய் மற்றும் உதவியாளா் அருணாச்சலம் ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்திரசேகா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். அங்கு அவா் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்ததுடன், அதற்கு ரூ. 23 கோடி விலை பேசி உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சந்திரசேகரை தொடா்புகொண்ட இடைத்தரகா்கள், நகை வாங்கும் நபா்கள் அதற்கான பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும், அதை சென்னை வடபழனியிலுள்ள தனியாா் ஹோட்டலில் வைத்து தருவதாகவும் கூறி, அங்குள்ள ஒரு அறைக்கு சந்திரசேகரை வரவைத்துள்ளனா். ஹோட்டலுக்கு தனது வளா்ப்பு மகளான ஜானகி (27) என்பவருடன் வந்திருந்த சந்திரசேகா், குறிப்பிட்ட அறைக்கு தனியாக வைர நகையுடன் சென்றுள்ளாா்.
ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரசேகா் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜானகி, அறைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சந்திரசேகரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, வைர நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஹோட்டல் நிா்வாகம் கொடுத்த தகவலின்படி, ஜானகி, அவரது நண்பா் சுப்பிரமணி, ஓட்டுநா் ஆகாஷ், இடைத்தரகா்களான ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் தியாகராய நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.