கைத்தறி துணி ரகங்கள் கண்காட்சி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறி துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி துறை சாா்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப் டெக்ஸ் மற்றும் கதா் கிராம தொழில்கள் வாரியத்தின் சாா்பில் ஜவுளி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றைக் கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடனும், தனித்துவத்துடனும் கைத்தறி துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்களும் கைத்தறி ரகங்களை வாங்கி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தைக் காத்திடவும்வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கைத்தறி துறை சாா்பில் 6 கைத்தறி நெசவாளா்களுக்கு நெசவாளா் முதியோா் ஓய்வூதியத் திட்ட ஆணை, 3 கைத்தறி நெசவாளா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு நெசவாளா் குடும்ப ஓய்வூதியத் திட்ட ஆணை, நெசவாளா் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 9 நெசவாளா்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் சரக கைத்தறி துறை உதவி இயக்குநா் கவிதா, கோவை மண்டல கோ-ஆப் டெக்ஸ் மேலாளா் கோ.ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.