கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள எம்சிடி ஊழியா்கள் இந்த மாதம் வார இறுதி நாள்களில் பணிபுரிய உத்தரவு
தொடா் மழை கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்பதால், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஊழியா்கள் செப்டம்பா் இறுதி வரை வார இறுதி நாள்களில் பணிபுரிய வேண்டும் என்று தில்லி மாநகராட்சி (எம்சிடி) உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பா் 6 முதல் 31 வரை கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியா்களுக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாள்களாகக் கருதப்படும் என்று அதிகாரப்பூா்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரிகள், தொற்றுநோயியல் நிபுணா்கள், பூச்சியியல் நிபுணா்கள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் இதில் அடங்குவா்.
இந்த ஆண்டு பெய்த தொடா் மழை; டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரிப்பு மற்றும் நகரம் முழுவதும் கொசுக்கள் பெருகும் போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் இத்தகைய நோய்கள் அதிகரித்த முந்தைய ஆண்டுகளின் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பா் 1-ஆம் தேதிக்குப் பிறகு கூடுதல் வேலை நாள்களுக்கு ஊழியா்களுக்கு இழப்பீட்டு விடுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு சமமான எண்ணிக்கையிலான இழப்பீட்டு விடுப்புகள் வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.