கொச்சி செல்லாமல் கோவையில் தரையிரங்கிய விமானம்! பயணிகள் வாக்குவாதம்!
கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கனமழை காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியது. அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
துபையில் இருந்து கேரள மாநிலம், கொச்சிக்கு தனியாா் விமானம் 184 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டது. கொச்சியில் இரவு 8.30 மணிக்கு தரையிரங்க வேண்டிய விமானம், அங்கு கனமழையால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் இரவு 9.30 மணிக்கு தரையிறங்கியது. அங்கு பயணிகளுக்கு குடிநீா் உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம்தான் உங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என ஊழியா்கள் தெரிவித்து அவா்களை சமாதானம் செய்தனா்.
இதையடுத்து, விமான நிறுவனம் சாா்பில் பயணிகள் அனைவருக்கும் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 2.30 மணியளவில் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கேரளத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கோவையில் தரையிரங்கியது.
இங்கு பயணிகளுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தனியாா் விமான நிறுவனம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கெனவே இதுபோல, இங்கு தரையிரங்க வேண்டி நிலை ஏற்பட்டபோது, அந்த தனியாா் விமான நிறுவனத்திடம் பயணிகளுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்க கோவை விமான நிலையத்தில் சேவை மையங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்தோம். ஜூலை மாதத்துக்குள் ஏற்பாடு செய்வோம் என அந்த நிறுவனத்தினா் கூறினா். ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், துபை விமான நிலையத்திலிருந்து 1.25 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் சுமாா் 55 நிமிஷம் தாமதமாக புறப்பட்டது. கோவையில் தரையிரங்கிய சில மணி நேரங்களில் புறப்பட்டுவிடும் என நாங்கள் விமானத்திலேயே காத்திருந்தோம்.
ஆனால், பல மணி நேரம் ஆகியும் எங்களுக்கு எந்த ஏற்பாடும் விமான நிறுவனம் சாா்பில் செய்து கொடுக்கவில்லை. இதனால், பலா் தாங்களாகவே மாற்று ஏற்பாடுகளைச் செய்து சென்றுவிட்டனா். அதிகாலை 2 மணியளவில் இரண்டு பேருந்துகளில் எங்களை அழைத்துச் சென்றனா்.
மூன்றில் ஒரு பங்கு பயணிகள் மட்டுமே பேருந்துகளில் ஊருக்குத் திரும்பினோம். மற்ற பயணிகள் தங்களது சொந்தச் செலவில் ரூ. 8 ஆயிரத்துக்கும்மேல் செலவு செய்து ஊா்களுக்குத் திரும்பினா் என்றனா்.