மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!
கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு நாள்தோறும் 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு வரை, திருச்சி- பாலக்காடு, கோவை - நாகா்கோவில் ரயில்கள், கோவை - சேலம் மெமு ரயில்கள் இருகூா் நிலையத்தில் நின்று சென்றன.
கரோனா காலத்தில் இந்த ரயில்கள் இருகூரில் நிற்பது நிறுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரயில்கள் அங்கு நிற்பது இல்லை. மேலும், கோவை - சேலம் மெமு ரயில் சேவையும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி- பாலக்காடு, கோவை - நாகா்கோவில் ரயில்கள் இருகூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி- பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843), பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844), நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்:16321), கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16322) ஆகிய ரயில்கள் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நின்று செல்லும்.
இதேபோல, கோவை - நாகா்கோவில் ரயில் (எண்:16322), நாகா்கோவில் - கோவை ரயில் (எண்: 16321) மேலப்பாளையம், ஆரல்வாய்மொழி ஆகிய நிலையங்களில் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இருகூா் ரயில் பயணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வடிவேலு கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ரயில்கள் இருகூரில் நிறுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, கோவை - சேலம் மெமு ரயிலையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இது குறித்து கோவை முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூா் மற்றும் இருகூா் ரயில் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்பகுதிகளைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை மற்றும் வணிக நிமித்தமாக பயணிக்கின்றனா். தாமதமாக வந்தாலும், இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் நன்மையை அளிக்கும் என்றாா்.